தூத்துக்குடி: தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் உயிர்க்கொல்லி நோயை உருவாக்குவதாகக் கூறி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.
இந்நிலையில், வாழ்வாதாரத்தைக் காக்க பசுமை முறையில் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஜூலை 21ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலமாகச் சென்ற மக்கள் அம்மாவட்ட ஆட்சியரிடம் ஆலையைத் திறக்க மனு அளித்ததுடன், ஸ்டெர்லைட்டைத் திறப்பவர்களுக்கே வரும் தேர்தலில் வாக்களிப்போம் என முழக்கமிட்டனர்.
ஆலையைப் பசுமை முறையில் திறக்க நிபுணர் குழுவினர் பரிந்துரை அளித்தது மகிழ்ச்சியாக உள்ளதாகத் தெரிவித்த மக்கள், குஜராத், ஒடிசா போன்று தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த மே மாதம் 14ஆம் தேதி தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் எம்.பி. கனிமொழியை நேரில் சந்தித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டுமென கோரிக்கை மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20,000 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வந்ததாகவும் ஒப்பந்த ஊழியர்களாக 3,500 பேர் வரை அங்கு பணியாற்றி வந்ததாகவும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டனர்.
“காப்பர் தேவைக்கு இந்தியா இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை காப்பர் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்தது.
“ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாகவும் பணிபுரியும் தொழிலாளர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
“அப்போது, ஏற்பட்ட போராட்டங்கள் வன்முறைகள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
“அப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த அந்த ஆலையைத் திடீரென அரசு மூடியதால் அவர்கள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
“ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தாலும் கொவிட் -19 கொள்ளைநோய்க் காலகட்டத்தில் அது உயிர்வாயுவைத் தயாரித்து வழங்கியது,” என அந்த மனுவில் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.
“ஆலைக்குள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் வரவில்லை.
“ஸ்டெர்லைட் ஆலையால் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் கிடையாது,” என்றும் அம்மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் திமுக எம்.பி. கனிமொழியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் உடன் இருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஆட்சியரிடம் ஆலையைத் திறக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

