சென்னை: புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தால் மட்டுமே கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கைதான் என மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அண்மையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பதாகவும் அதைக் கண்டு முதல்வர், அச்சத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் என்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் வழி நடத்திச் சென்றார். அவரை தமிழ் நாடு காவல்துறை கைது செய்துள்ளது.
அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வர்த்தகமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இப்போது வெளிப்பட்டுள்ளது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
தடையை மீறி கையெழுத்து இயக்கம்: தமிழிசை சௌந்தரராஜன் கைது
மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் சென்னையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கையெழுத்து பெறவும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அங்கு வந்த காவல்துறையினர் அனுமதி வாங்காமல் கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர். காவலர்கள் தமிழிசை சௌந்தரராஜனிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் காவலருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறை தொடர்ந்து தடுத்ததால் பாஜகவினர், காவலர்களுக்கு எதிராக முழங்கினர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார்.