திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நிபந்தனைகளுடன் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நிபந்தனைகளுடன் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி

கோப்புப் படம்: மாலை மலர்

21 Nov 2026 - 7:28 pm

2 mins read

புதுடெல்லி: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.

தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அனுமதி வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.

இதை உறுதி செய்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, கோவில் நிர்வாகத்தினர் மட்டுமே அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்துத் தமிழக அரசின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

மலையில் உள்ள தூண் தீபத்தூண் அல்ல என்றும் அது எல்லை அளவீட்டுக் கல் தூண் மட்டுமே என்றும் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோவில் அருகேதான் தீபம் ஏற்றப்படுகிறது என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, ஆண்டுக்கு ஒரு நாள், இரண்டு மணி நேரம் மட்டுமே தீபம் ஏற்றப்படுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஒரேயொரு முறை ஏற்பாடாக வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) கார்த்திகை தினத்தன்று தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

அதேசமயம், இந்த நிகழ்விற்குக் கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். தீபமேற்றும் இடத்திற்குப் பொதுமக்கள் யாரும் செல்ல அனுமதி கிடையாது.

மேலும், அப்பகுதியில் கூட்டமாகக் கூடுவதோ முழக்கங்களை எழுப்புவதோ கூடாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்