சென்னை: உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
அவ்வாறு அமைவது தென்மாநில மக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்று சென்னை வழக்கறிஞர் மன்ற (பார் கவுன்சில்) நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கேற்றுள்ள காரணத்தால் தாம் இக்கோரிக்கையை முன்வைப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
“அண்மைக் காலங்களில், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சித் தத்துவம் பாதிக்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது.
“நிதி, கல்வி போன்ற பல விஷயங்களில், மாநில அரசுகளின் சுயசார்புத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
“அரசமைப்புச் சட்டத்தின் ஆளுமையை உறுதி செய்வதில், மாநிலங்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதில் நீதித்துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது,” என்றார் ஸ்டாலின்.
தமிழக அரசு, அரசியல் சாசனத்தின் வார்த்தைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைக்கப்பட்டதுபோல், உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதை தமிழக முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி இருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

