தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.
வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதிவாசிகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போராட்டத்தின் நூறாவது நாளில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். அப்போது, வன்முறை வெடித்ததாகக் கூறி, காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மாண்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி முத்திரையிட்டது.
அதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைமீதான தடை உத்தரவை நீக்கி, அதனை மீண்டும் திறக்க அனுமதி வழங்கக் கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.
ஆயினும், அத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
அவ்வழக்கு திங்கட்கிழமை (நவம்பர் 11) விசாரணைக்கு வந்த நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்க அனுமதி வழங்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பைச் சீராய்வு செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

