புதுடெல்லி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து நீக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட சில விவகாரங்களில் ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி உரை நிகழ்த்தாமல் வெளியேறிச் சென்றார். தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் தரப்பு கூறியதற்கு தமிழக அரசு மறுத்துவிட்டது.
இதையடுத்து, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தாமல் சென்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும் அவரைத் தமிழக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க மத்திய அரசுக்கும் அதிபருக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் கூறி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு திங்கட்கிழமை (பிப்ரவரி 3) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், இதுபோன்ற வழக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

