புதுடெல்லி: தமிழக கோவில்களுக்கு எதிரான வழக்கில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கை முடித்து வைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மீட்டெடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில தரப்பினர் வழக்கு தொடுத்திருந்தனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வெறும் சட்ட அம்சங்களை மட்டுமே எடுத்துக்கொள்ளாமல், இந்த விவகாரத்தில் அனைத்து சூழல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.
“குறிப்பாக, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்காமல் எந்தவித முடிவையும் எடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் சட்டப்பிரச்சினை இருந்தால் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை முதலில் அணுகி இருக்கலாமே?
“ஒவ்வொரு சூழலையும் சரியாக ஆராயவும் கையாளவும் உயர் நீதிமன்றத்தால் கண்டிப்பாக முடியும். இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் நிபுணர் குழுவை அமைக்க விரும்பினால் உயர் நீதிமன்றம் அதனை மேற்கொண்டு நடவடிக்கையாக எடுக்கலாம்,” என்று நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.

