சென்னை: தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய விருதான ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் 2025’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உலகளவில் இவ்விருதைப் பெற்ற ஐவரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரியாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கைப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் அவரது அயராத அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளுக்காக இந்த அங்கீகாரம் அவருக்குக் கிடைத்துள்ளது.
சுப்ரியா சாஹுவுக்கு விருது கிடைத்திருப்பதால் தமிழ்நாடு பெருமை கொள்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ஈரநிலப் பாதுகாப்பு, அலையாத்திக் காடுகள் பரப்பை அதிகரிப்பது, அருகி வரும் அரிய உயிரினங்களைக் காப்பது, வனப்பரப்பை அதிகரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல், ‘மீண்டும் மஞ்சப்பை’ போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்கள் ஆகியவை அவரது முக்கியப் பங்களிப்புகளாகும். இந்த முயற்சிகள் மூலம் அவர் மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவியுள்ளார்.
தமிழக அரசின் முயற்சிகளில் அவரது பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என நம்புவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுப்ரியா சாஹுவின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகள் மூலம் 25 லட்சம் பசுமை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், வனப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டு, 12 மில்லியன் மக்களுக்குப் பயனளித்து, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனுக்கு ஒரு முன்மாதிரியாக அவர் திகழ்கிறார் என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஐநா 127 பேருக்கு ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருதை வழங்கியுள்ளது.

