சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டில் உள்ள ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் மதுப்புட்டிகளுக்கு மின்னிலக்க முறையில் ரசீது வழங்கும் நடைமுறை வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) முதல் தொடங்கியுள்ளது.
தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் இரவு மற்றும் விடுமுறை காலங்களிலும் கள்ளத்தனமாக மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுபான விற்பனையை டிஜிட்டல் மயமாக்க ‘டாஸ்மாக்’ நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.294 கோடி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மின்னிலக்க வசதியைக் கொண்டு வருவதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக பரிசோதனை அடிப்படையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமையிலிருந்து தொடங்கப்பட்டதாக தினமணி தகவல் தெரிவித்தது.
பழைய மதுபானங்கள் இருப்பில் இருந்ததால், புது மதுப்புட்டிகளை விற்பனைக்குக் கொண்டுவந்த பின்னரே இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மதுப்பிரியா்கள் மதுப்புட்டிகளை வாங்கும்போது, அதனுடன் அதற்கான ரசீதும் வழங்கப்படும். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பணத்தை மட்டும் செலுத்தினால்போதும். கூடுதல் கட்டணம் கொடுக்கத் தேவையில்லை. இதற்கு ‘ஜிபே’ உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மதுப்புட்டிகளை வாங்கிய பிறகு, அதிலுள்ள ‘கியூஆா்’ குறியீட்டை கைப்பேசி செயலிவழி வருடினாலே அதுகுறித்த முழு தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.