திடீர்த் திருப்பங்களுக்குப் பஞ்சமின்றி தமிழக அரசியல் நகர்ந்த வண்ணம் உள்ளது.
தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான ஆறு இடங்கள்தான் விஜய் முதல்வர் ஆகும் முயற்சியின் குறுக்கே நிற்கும் பிரச்சினை. 108 இடங்களில் வென்றிருக்கும் தவெகவுக்கு காங்கிரசின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். 108ல் விஜய் வென்ற இரு தொகுதிகளில் ஒன்று சேர்க்கப்படாது என்பதால், 107+5=112 என்பதே தவெகவின் நிலை.
ஆனால், 118 பேரின் ஆதரவுக் கையெழுத்துடன் வந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைப்பேன் என ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். பல கட்சிகளை ஒட்டுப்போட்டுத் தைத்து உருவாக்கப்படும் கூட்டணி, ஆட்சியில் அமர்ந்தால் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என ஆளுநர் யோசிக்கக்கூடும். ஆட்சியை அமைக்கச் சொல்லிவிட்டு, பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் தரப்பட்டால், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடந்து ஜனநாயகம் கேலிக்கூத்தாவதைத் தடுக்கவும் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 163வது விதிப்படி, எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை இல்லாமல், தொங்கு சட்டமன்றம் அமையும்போது, யாரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்க ஆளுநருக்குத் தனி அதிகாரம் உண்டு. தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தவெகவை அவர் அழைக்கலாம். சூழ்நிலையைப் பொறுத்து அவரது முடிவு மாறக்கூடும். ஆனாலும், ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு.
எனவே ஆளுநர் கேட்டபடி 118 எம்எல்ஏக்களின் விவரத்தை அவசரமாக அளிக்கவேண்டிய கட்டாயத்திற்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார். அவரின் அந்த நிலையைப் புரிந்துகொண்ட உதிரிக் கட்சிகள் ஓடிவந்து ஆதரிக்கும் நிலையில் இல்லை. இரு எம்எல்ஏக்களை வைத்திருக்கும் கட்சிகூட ‘பொறு பார்க்கலாம்’ என போட்டுப் பார்க்கிறது.
காங்கிரஸ் வெளியேறியது போக திமுக கூட்டணியில் வென்ற ஒன்பது எம்எல்ஏக்கள் உள்ளனர். இடதுசாரிகள் 4, விசிக 2, தேமுதிக 1, இயூமுலீக் 2 - இவர்கள் அத்தனை பேரும் காங்கிரசைப் போல திமுகவுக்குத் துரோகம் செய்துவிட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இதுபோன்ற அரசியல் பேரத்திற்கு அடிபணியாது. அதிமுக கூட்டணி எம்எல்ஏக்களை இழுக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளதால் பாமகவை நாடமுடியாத நிலை தவெகவுக்கு.
தேவையான இடங்கள் ஆறு என்றாலும், அதனை அடைவது கடினமாக உள்ள நிலையில், ஆட்சியில் அமராமல் தவெகவைத் தடுக்க, பழைய சம்பவங்களின் அடிப்படையில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான தந்திர முயற்சிகளில் பெரிய கட்சிகள் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
2016 தேர்தலில் வென்று முதல்வர் ஆன ஜெயலலிதா அதே ஆண்டில் காலமான பின்னர், முதல்வர் பதவியைப் பெற சசிகலா தீவிரமாக முயன்றார். ஆனால், அவரை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இழுத்தடித்த வேளையில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி சசிகலா சிறை செல்ல நேரிட்டது.
தொடர்புடைய செய்திகள்
2018ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத் தேர்தலில், எடியூரப்பா தலைமையிலான பாஜக 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மை பலமான 113 இடங்களுக்கு இன்னும் ஒன்பது எம்எல்ஏக்கள் அந்தக் கட்சிக்குத் தேவைப்பட்டன. அந்த நிலையில், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாள் அவகாசம் வழங்கினார். ஆனால், பணம், பதவி ஆசை காட்டி குதிரை பேரம் நடக்கும் அபாயம் இருப்பதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக வழக்குப் போட்டது மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி.
அதனை ஏற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, 15 நாள் அவகாசத்தை ரத்து செய்து உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் அவகாசத்தை 24 மணி நேரமாகக் குறைத்தார். அந்தக் குறுகிய காலத்தில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவைத் திரட்டத் தவறிய எடியூரப்பா முதல்வர் ஆகமுடியாமல் போனது.
விஜய் விஷயத்திலும் இதைப்போன்ற விஷப் பரிட்சைகள் நடத்தப்படக்கூடும் என்பதால், திக்... திக்... திகில் தொடர்கிறது. ஆக, விஜய் இந்த வாரம் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் வற்றிவிட்டதாகவே தெரிகிறது. தமிழக அரசியல் களத்தில், வரலாறு காணாத அதிசய நிகழ்வுகள் அரங்கேறுவதால் தொங்கு சட்டமன்றக் குழப்பம் தங்குதடையின்றித் தொடர்கிறது. -திருநா

