சென்னை அருகே ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தைவானிய தொழில்பூங்கா: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு

2 mins read
e09853c3-bd0a-4093-ac99-ddb7dbdb53a9
டிஆர்பி ராஜா. - படம்: ஊடகம்

சென்னை: தைவான் நிறுவனங்கள் சென்னை அருகே அமைக்கவுள்ள தொழில்பூங்காவுக்காக 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவிருப்பதாக தமிழகத் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், தைவானிய தொழில்பூங்கா மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தொழில்பூங்காக்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக ரூ.120 கோடி மதிப்பீட்டில் 2,000 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ராஜா தெரிவித்தார்.

இந்தியாவில் உற்பத்தித்துறை, சேவைத்துறை, வாகன உற்பத்தித்துறை, ஜவுளி என ஒட்டுமொத்தமாக அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், உயர் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தியிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது என்றார்.

கடந்த 2021ஆம் ஆண்டு, 1.66 பில்லியன் டாலராக இருந்த மின்னணுக் கருவிகளின் ஏற்றுமதியானது, 2024இல் 9.56 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு வந்த முதலீடுகளில் 30.32% முதலீடுகள் தென்தமிழகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜா, தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகள் வரலாறு காணாத தொழில்வளர்ச்சியைக் கண்டு வருவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

“தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்காக, சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 20 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உலகத்தரத்தில் தைவானிய தொழில்பூங்கா அமைக்கப்படும். தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வண்ணம் மினி டைடல் பூங்கா நிறுவப்படும்.

கள்ளக்குறிச்சியில் 9,000, தென்காசியில் 3,000, சிவகங்கையில் 2,000, வேலூரில் 5,000, திருப்பத்தூரில் 2,500 வேலை வாய்ப்புகள் எனப் பல்வேறு தொழில் பூங்காக்கள் குறித்தும் அமைச்சர் ராஜா பேரவையில் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்