சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ரூ.300 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நில மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள்மீது ஒரு வாரத்துக்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை தாம்பரம் மண்டலத்திற்கு உட்பட்ட அகரம்தென் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான பெருமதிப்பிலான நிலங்கள் உள்ளன.
அவை தனிநபர்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தீவிர புலனாய்வில், அப்பகுதியில் உள்ள ரூ.300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த நில அளவையாளர், ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மனைப்பிரிவு விற்பனையாளர் ஆகியோர்மீது தாம்பரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அரசு நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து புலன்விசாரணை நடத்தி வருகின்றனர்.

