ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் விக்கிரவாண்டி நோக்கி திரும்பியுள்ளது

3 mins read
51e49822-21ee-4484-918a-70530ff3781c
காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பதாகைகளுடன் விஜய்யின் பதாகையும் உள்ளது. - படம்: ஊடகம்

விழுப்புரம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

பிரபல சினிமா நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் அண்மையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கட்சிக் கொடியையும் கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கான முதல் வேலையாக, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநாடு நடைபெறும் இடத்தில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டிற்கு வருகை புரியும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவருக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், மாநாட்டுத் திடல் முழுவதும் 700க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 50,000 பேர் இருக்கும் வகையில் இருக்கைகள், மழை பெய்தால் பாதிக்காதவண்ணம் ஒரு சில அடிகள் உயரத்தில் பலகைகள் போடப்பட்டு அதன் மேல் இருக்கைகள் போடப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திக்க 800 மீட்டர் தூரத்திற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான வாகனம் நிறுத்துமிடம், கழிவறை, குடிநீர், மருத்துவம், தீயணைப்புத் துறை என அனைத்து வசதிகளையும் பல குழுவினரும் செய்து வருகின்றனர். குறிப்பாக, மாநாட்டுக்கான பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மூலம், பாதுகாப்பு மற்றும் உடல்நலன் கருதி கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர், சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் மாநாட்டுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசியல் மாநாட்டில்தான் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச இருக்கிறார். தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீட்டுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் தான் விஜய் பேச இருக்கிறார்.

2026ஆம் ஆண்டு தனது அரசியல் பாதை என்ன? கூட்டணியா, தனித்தா? என்பது குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் விஜய் தெளிவுபடுத்த இருக்கிறார்.

ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் விக்கிரவாண்டி நோக்கியே திரும்பி நிற்கிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் விஜய்யின் அரசியல் நடவடிக்கையை உற்று நோக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாநாட்டுப் பணிக்காக வந்திருக்கும் தொண்டர்கள் தங்கள் வீட்டு விஷேசம்போல் அணி திரண்டு தீயாய் மாநாட்டு வேலைகளைப் பார்த்து வருகின்றனர்.

தங்களை வழிநடத்தும் தளபதிக்காக மாநாடு நடைபெறும் 27ஆம் தேதியை தீபாவளிபோல் கொண்டாட காத்திருக்கின்றனர், தமிழக வெற்றிக்கழகத்தினர்.

விக்கிரவாண்டியில் குவிந்து வரும் தொண்டர்கள், விறுவிறுப்பான மாநாட்டுப் பணிகள், அரசியலில் விஜய் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடி என அனைத்தும் தமிழக அரசியல் களத்தைச் சூடேற்றி வருகிறது.

குறிப்புச் சொற்கள்