பாஜக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா

பாஜக கூட்டணியிலிருந்து விலகியது தமாகா

2 mins read
df86e1ae-03dc-4d46-a260-e996e98338c6
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நடைபெற்றது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நடைபெற்ற தமாகா மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, எட்டு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், கட்சியின் தேர்தல் தோல்விகள் குறித்தும் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா சந்தித்த தொடர் தோல்விகள் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. குறிப்பாக, 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஐந்து இடங்களில் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிட்டும் தமாகாவால் ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு கூட்டணிகளில் பங்கேற்றும் தமாகாவால் தனது இலக்கை எட்ட முடியவில்லை,” என்று குறிப்பிட்டார்.

“கூட்டணி அரசியலால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிர்வாகிகள் கருதுகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் வரும் வரை தமாகா தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் விளக்கினார்.

இனி நகரம் முதல் சிற்றூர் வரை கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தி தமாகாவை வலுப்படுத்தப் போவதாகவும் திரு வாசன் கூறியுள்ளார்.

அதேநேரம், தமாகா அடுத்ததாக திமுக அல்லது தவெகவுடன் கூட்டணி வைப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்