தமிழ்நாடு: இவ்வாண்டில் இதுவரை 11,743 பேர் டெங்கியால் பாதிப்பு

2 mins read
095559c2-dbed-4070-ae6f-451716ecbebe
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 5,000க்கும் மேற்பட்டோரை டெங்கி தொற்றிவிட்டது. - படம்: ஊடகம்

சென்னை: இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 11,743 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் நால்வர் உயிரிழந்துவிட்டதாகவும் மாநில மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாள்களாக, காய்ச்சலுக்காக மருத்துவமனையை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெங்கிக் காய்ச்சல் பாதிப்பும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 1ஆம் தேதிமுதல் இதுவரை 11, 743 பேருக்கு டெங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் நால்வர் இறந்துவிட்டனர். டெங்கி தொற்றியவுடன் யாரும் இறந்துவிடுவதில்லை. நோய் பாதிப்பு வந்தவுடன் உடனடியாக சிகிச்சை பெறாமல் வீடுகளிலே சிகிச்சை பெற்று, பாதிப்பு முற்றியபின் மருத்துவர்களைத் தேடுவதும் மருத்துவமனைக்கு வருவதும் ஒரு காரணம்,” என்று சொன்னார்.

நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளோர், குறிப்பாக கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் டெங்கி தொற்றியதும் உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) மட்டும் 205 பேரை டெங்கி தொற்றியதாகப் பதிவானது. இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலைவரை 6,565 பேரை டெங்கி தொற்றியதாகப் பதிவான நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் புதிதாக அத்தொற்றுக்கு ஆளாயினர்.

ஒட்டுமொத்த டெங்கி பாதிப்பில், சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய பத்து மாவட்டங்களிலும் சேர்த்து 57.6 விழுக்காடு பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மட்டும் 14% டெங்கி பாதிப்புகள் பதிவாயின. கோவை (11%), கிருஷ்ணகிரி (8%) அடுத்த இரு நிலைகளில் உள்ளன.

டெங்கி பாதிப்பு அதிகமாகப் பதிவாக கூடுதல் கண்காணிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு கூறினார்.

குறிப்புச் சொற்கள்