சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு மூளைச்சாவு அடைந்த 266 பேரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதன் மூலம், 1,427 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினரும் செயலாளருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் உறுப்பு தானம் அளிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதனால் 1,500க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி 186 பேரும் மற்ற வகையில் 80 பேரும் மூளைச்சாவு அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், தானம் அளித்தவர்களின் 211 பேர் ஆண்கள் என்றும் 55 பேர் பெண்கள் என்றும் கூறினார்.
“154 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 112 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்தபோது மூளைச்சாவு அடைந்ததாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுநீரகம், கல்லீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகளை மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்கள் தானமாக அளித்துள்ளனர். அவற்றின் மூலம் 1,476 பேர் பயனடைந்துள்ளனர் என்றார் கோபாலகிருஷ்ணன்.
தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்று திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.

