சென்னை: கைதிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் பாலமாக இருந்து, கஞ்சா, புகையிலை, கைப்பேசிகள் போன்றவற்றைச் சிறைச்சாலைக்குள் கடத்த உதவியதாகக் கூறி, கடந்த நான்கு ஆண்டுகளில் சிறைத்துறை ஊழியர்கள் 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
சிறைத்துறைத் தலைமை இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 21) தாக்கல் செய்த அறிக்கை மூலம் இவ்விவரம் தெரியவந்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் மூவர், 2022இல் நால்வர், 2023இல் ஐவர், 2024இல் மூவர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்களுடன், 2022இல் ஒருவரும் 2024இல் 13 பேரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நான்கு ஆண்டுகளில் சிறைத்துறை ஊழியர்கள் 26 பேர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அக்காலகட்டத்தில், மத்தியச் சிறைச்சாலைகளுக்குள் சட்டவிரோதக் கடத்தல் தொடர்பில் 709 சம்பவங்கள் பதிவாயின. அச்சம்பவங்களில் 636 கைதிகள், 49 பார்வையாளர்கள் மற்றும் சிறைத்துறை ஊழியர்கள் 55 பேருக்குத் தொடர்பிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சிறைச்சாலை வளாகத்திற்குள் பொருள்களைத் தூக்கி வீசியதாக அல்லது மண்ணில் புதைத்துவைத்ததாக 163 சம்பவங்கள் பதிவாயின.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் உட்பட மூன்று கைதிகள் சிறைச்சாலைக்குள் சிறைத்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறி, கைதிகள் மூவரின் உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவற்றை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
அவ்வழக்கு குறித்து இம்மாதம் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, கைப்பேசி ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் அப்போது அதிகாரிகளுக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும், அப்போது கைதிகளை அதிகாரிகள் தாக்கியதாகவும் சொல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்தே, சிறைச்சாலைகளுக்குள் பொருள்கள் கடத்தப்படுவது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.