தமிழகத்தில் 2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 பேர் உயிரிழப்பு

1 mins read
489f227c-7330-48cd-857d-602f2d7f30db
திருவான்மியூரைச் சேர்ந்த நாய் ஆர்வலர் ஒருவர் அங்குள்ள தெருநாய்களுக்கு உணவளிக்கிறார். - படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏப்ரல் வரை 2.09 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் உரிய நேரத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடிய காரணத்தால் 13 பேர் ரேபிஸ் நோய்க்குப் பலியாகியுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக, சேலத்தில் 12,177 பேரும் திருச்சியில் 9,939 பேரும் திருவள்ளூரில் 9,265 பேரும் திண்டுக்கல்லில் 8,239 பேரும் விழுப்புரத்தில் 8,213 பேரும் நாயக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

புள்ளிவிவரங்களின்படி, நாய்க்கடியால் பாதிக்கப்படுபவர்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஆண்கள். குறிப்பாக, 31 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்களும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய், பூனை, குரங்கு போன்ற விலங்குகள் மனிதர்களைக் கடிக்கும்போது அந்தக் கிருமி பரவுவதாகக் கூறப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கைகள்

செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவது அவசியம். நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாய்க்கடிக்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் உயிரிழப்பைத் தவிர்க்கலாம். சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்