சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 449.000 ஒரு நபர் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாக கூட்டுறவு, உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இடப்பெயர்வும் இறப்புமே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை கோபாலபுரத்தில் திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான கிடங்கைத் திங்கட்கிழமையன்று (ஜூலை 29) திரு ராதாகிருஷ்ணன் ஆய்வுசெய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் மொத்தம் 36,954 நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, உப்பு போன்றவை போதுமான இருப்பு உள்ளது. வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு வழங்கவும், ஒரு கோடி பாக்கெட் பாமாயில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“கடந்த ஆண்டில் 4.54 லட்சம் குடும்ப அட்டைதாரருக்கு நகல் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 4.49 லட்சம் தனிநபர் ஸ்மார்ட் கார்டுகள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன,” என்று கூறினார்.
மேலும், சென்ற ஆண்டு மாநிலத்தில் மொத்தம் 58 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, ரூ.6.98 கோடி மதிப்பிலான 18,194 குவிண்டால் அத்தியாவசியப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்றும் அதன் தொடர்பில் 5,631 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக 143,000 பேருக்கு ரூ.20,807 கோடி அளவில் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.

