10,000 கால்நடைப் பண்ணைகள் அமைக்க தமிழக அரசு திட்டம்

2 mins read
f9ca0491-27f3-4de5-ad27-e08b7668390e
மதுரை ஆவின் நிறுவனத்தில் ஆய்வுசெய்த தமிழகப் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். - படம்: தி இந்து

மதுரை: இவ்வாண்டு 10,000 கால்நடைப் பண்ணைகளை ஏற்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக அம்மாநிலத்தின் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைத்துக் கால்நடைகளுக்கும் காப்புறுதி வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மதுரை ஆவின் நிறுவனத்திற்கு சனிக்கிழமை (ஜூலை 13) நேரில் சென்ற அமைச்சர் மனோ தங்கராஜ், அங்கு ஆய்வு மேற்கொண்டு, அதன் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரை ஆவினில் சென்ற ஆண்டு நாளொன்றுக்கு 120,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அது 170,000 லிட்டராக உயர்ந்துள்ளது. இது, 200,000 லிட்டராக உயர்த்தப்படும்.

“தமிழ்நாட்டில் நடப்பாண்டில் பத்தாயிரம் கால்நடைப் பண்ணைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுரையில் மட்டும் 700 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

“மாநிலத்தில் தனியார் பால் பண்ணைகளைவிட ஆவின் நிறுவனம் நாள்தோறும் 3.6 மில்லியன் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு பால் கொள்முதல் 8.5 விழுக்காடுவரை கூடியுள்ளது.

“அனைத்துக் கால்நடைகளுக்கும் காப்புறுதி வழங்கத் திட்டமிட்டு வருகிறோம். ஆவினில் இணைக்கப்படாத கால்நடைகளுக்கும் காப்புறுதித் திட்டத்தின்கீழ் உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

விவசாயிகளுக்குக் கால்நடைத் தீவனம் நியாயமான விலையில் வழங்கப்பட்டு வருகிறது என்றும் பொதுமக்களுக்கும் முகவர்களுக்கும் பால் விநியோகம் செய்ய புதிய நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், மதுரையில் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் ரூ.90 கோடி வரை கால்நடைக் கடன் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய கடன்களை வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் சொன்னார்.

மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் பால் முகவர்களுக்கான தரகுத்தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்