சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் புதன்கிழமையன்று (ஜூன் 26) தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இடஒதுக்கீடு மசோதா கிடப்பில் இருப்பதாகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்றும் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து, சாதிவாரிக் கணக்கெடுப்புடன், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை உடனடியாகத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.
“சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசுதான் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும்,” என்று திரு ஸ்டாலின் பேசினார்.
சில புள்ளிவிவரங்களை மாநில அரசால் சேகரிக்க முடியாது என்பதால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்துவதுதான் முறையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு ஸ்டாலின், கொவிட்-19 தொற்றுப் பரவல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி 2021ஆம் ஆண்டுமுதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சாதிவாரிக் கணக்கெடுப்புத் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.