தமிழக அரசைக் கண்டித்து தமிழக பாஜக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

1 mins read
752fd3a4-da9c-4d5a-ba76-eafa4a8aaa3e
தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களுடன் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகள் இருப்பதாக போராட்டத்தின்போது குறிப்பிட்டார் அண்ணாமலை. - படம்: இந்து தமிழ்

சென்னை: தமிழக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பை நியாயமான முறையில் நடத்த வலியுறுத்தி, சென்னையில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாநில உரிமைகளை தமிழக முதல்வர் பேண வலியுறுத்தியும் தமிழக பாஜக சனிக்கிழமை (மார்ச் 22ஆம் தேதி) கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டது.

அப்போது பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சிகள் ஏதேதோ கற்பனை செய்துகொண்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதாக விமர்சித்தார்.

அந்த நாடகம் ஒருபக்கம் தொடர்ந்தாலும், மறுபக்கம் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்துள்ள அண்டை மாநில முதல்வர்களுடன் தமிழக உரிமைகள் குறித்து முதல்வர் பேச வேண்டும் என வலியுறுத்தினார்.

சென்னை பனையூர் பகுதியிலுள்ள தனது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களுடன் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்சினைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும், காவிரி நதிநீர்ப் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, செண்பகவல்லி அணை பிரச்சினை, மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் பிரச்சினை எனப் பலவற்றைப் பட்டியலிட்டார் அண்ணாமலை.

மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்களின் நலன்களைக் காக்கவே இப்போராட்டம் நடத்தப்படுகிறது என்றும் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்