கூட்டணியில் இணையுமாறு சீமானுக்கு தமிழக பாஜக அழைப்பு

2 mins read
d968ee2d-f087-43a4-8f02-717f94e882f3
சீமான், நயினார் நாகேந்திரன். - படம்: ஊடகம்

சென்னை: திமுக அரசை அகற்ற வேண்டுமானால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நாம் தமிழர் மட்டுமல்லாமல், திமுகவை வீழ்த்த நினைக்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

மாறுபட்ட கொள்கைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி அமைத்ததற்கு கடந்த காலங்களில் நிறைய உதாரணங்கள் உள்ளதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.

“கூட்டணிக்கு இன்னும் கட்சிகளை எதிர்பார்க்கிறோம். திமுகவை வீழ்த்த எங்கள் கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சி வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். எனவே சீமானுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கிறேன்.

“காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை திமுக மிக மோசமாக வசைபாடியது. ஆனால் அடுத்த ஆறு மாத காலத்தில் அவருடன் கூட்டணி அமைத்தனர்.

“சீமான் போன்றவர்களால் பாஜக கூட்டணியில் நீண்டகாலம் நீடித்திருக்க முடியுமா என்று கேட்கிறார்கள். ஏன் முடியாது?

“ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களின் காலத்திலேயே இப்படியான சில முரண்பாடுகள் இருக்கவே செய்தன. அதனால் அரசியலில் எதுவும் சாத்தியம். இதைத்தான் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, பகையும் இல்லை என்றனர்.

“சில முரண்கள் தோன்றும்போது அவற்றை உடனுக்குடன் களைவோம். அதற்கு காலஅவகாசம் தேவைப்படலாம் என்பதால்தான் பொதுத்தேர்தல் நடைபெற ஓராண்டு இருக்கும்போதே கூட்டணி அமைத்துள்ளோம்,” என்றார் திரு. நயினார் நாகேந்திரன்.

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடும் என்பதில் உறுதியாக உள்ளார் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.

இதுவரை நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அக்கட்சி படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது 8% வாக்கு வங்கியை கைவசம் வைத்துள்ளது. இம்முறை விஜய்யின் தவெக கட்சியும் நாம் தமிழர் கட்சியும் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்த நிலையில், இருதரப்புக்கும் இடையே கொள்கை வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சீமானுக்கு வலைவீசியுள்ளது தமிழக பாஜக.

சீமான் உடனடியாக முடிவெடுப்பாரா அல்லது தேர்தல் நடைபெற இன்னும் 10 மாதங்களுக்கு மேல் காலஅவகாசம் உள்ளதால் பிறகு முடிவெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.

குறிப்புச் சொற்கள்