தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகிறது; டெல்லி விரைந்தார் அண்ணாமலை

2 mins read
dc23893d-05c3-45e0-801c-60ed2556f158
எடப்பாடி பழனிசாமியுடன் ஒத்துப்போக அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டு சேர்ந்து போட்டியிடுவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து உள்ளன.

சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) திடீரென டெல்லி சென்றார்.

அங்கு அன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த அந்தச் சந்திப்பின்போது அதிமுகவின் மேல்மட்டத் தலைவர்கள் சிலரும் உடன் இருந்தனர்.

பின்னர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும் அவர்கள் சந்தித்துப் பேசினர்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் நோக்கில் அந்தச் சந்திப்புகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வரும் கருத்துகள் அதனை உறுதி செய்யும் விதமாக உள்ளன.

அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “அதிமுகவைப் பொறுத்தவரை திமுகவை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள்.

“திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக அதிமுக எல்லாவித முயற்சிகளையும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலைப் பொறுத்து கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்,” என்றார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை (மார்ச் 27) காலை டெல்லிக்கு விரைந்தார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தலைவர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காமல் இணக்கமாக இருக்க வேண்டும் என அண்ணாமலையிடம் பாஜக தலைவர்கள் கூறுவார்கள் என்று கூறப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி போட்டியிட்டது.

ஆயினும், 2024 மக்களவைத் தேர்தலில் கூட்டணி முறிந்து, இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. இருப்பினும், அவை ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இடையே ஏற்பட்ட மோதல் அதிமுக-பாஜக கூட்டணி முறிய முக்கிய காரணமாக இருந்தது என்று கூறப்பட்டது.

மீண்டும் தனித்தனியாகப் போட்டியிடுவதைத் தவிர்த்து, கைகோத்துப் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றிக்கனி பறிக்கலாம் என அதிமுகவினரும் பாஜகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் திமுக தலைமையில் வலிமையான கூட்டணி நீடிக்கிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில் அனைத்தும் தனித்தனியாக சிதறிக் கிடக்கின்றன. இது ஆளும் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்