கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் - தம்பி ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

1 mins read
369753b3-2da5-4026-bd6d-7e65c554d8af
மாதிரிப்படம்: - பிக்சாபே

வேலூர்: கிரிக்கெட் விளையாடியபோது ஏரியில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற அண்ணனும் தம்பியும் நீரில் மூழ்கி மாண்டனர்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் - செம்பருத்தி இணையர். அவர்களுக்கு ராஜா, 10, ஸ்ரீசாந்த், 7, என இரு மகன்கள் இருந்தனர்.

இளையவன் ஸ்ரீசாந்துக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) பிறந்தநாள்,. அதனால், வீட்டில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியபின், அண்ணனும் தம்பியும் அருகிலிருந்த ஏரிப் பகுதியில் கிரிக்கெட் விளையாடச் சென்றனர்.

கிரிக்கெட் விளையாடியபோது தொலைவில் விழுந்த பந்தை அவர்கள் எடுக்கச் சென்றனர். முதல்நாள் மழை பெய்திருந்ததால் மண் அள்ளுவதற்காகத் தோண்டிய பெரும்பள்ளத்தில் நீர் நிரம்பியிருந்தது. அதனுள் தவறி விழுந்த அவர்கள் நீரில் மூழ்கினர்.

அப்பகுதியில் இயந்திரப் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முரளி என்பவர் சிறுவர்கள் நீரில் விழுந்ததைக் கண்டதும் காப்பாற்ற ஓடினார். அவர் நீரில் குதித்துத் தேடியும் சிறுவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, ‘108’ அவசர மருத்துவ வண்டிக்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் வந்து தேட, ராஜா உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டான். சற்று நேரத்தில் அவனுடைய தம்பி ஸ்ரீசாந்தின் உடலும் மீட்கப்பட்டது.

சிறுவனின் பிறந்த நாளன்று நிகழ்ந்த இத்துயரம் ஊர் மக்களைப் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியது.

குறிப்புச் சொற்கள்