தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘டிரோன்’களின் தலைநகரமாகுமா தமிழகம்

5 mins read
98551245-02e1-4f36-bcfb-2a839f6498db
‘டிரோன்’ விமானியாகப் பயிற்சி பெறும் பெண்களுடன் உரையாடும் பிரதமர் மோடி. - கோப்புப்படம்: ஊடகம்
multi-img1 of 3

இந்தியாவின் முதல் ‘ஆளில்லா வானூர்தி’ (டிரோன்) சோதனை மையம் தமிழகத்தில் அமைய உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.ராஜா தெரிவித்துள்ளார்.

செழிப்பான பாதுகாப்பு, விண்வெளி உற்பத்திச் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தொழில் துறையின் தேவைகளைப் புதுமையான முறையில் நிவர்த்தி செய்வதன் மூலம் இத்துறையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆளில்லா வானூர்தி சோதனை மையம் மூலம் இந்தியாவில் விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களைத் தொடங்குவதற்கான விருப்பமான இடமாக தமிழகம் மாறும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் பலவும் ‘டிரோன்’ துறையில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவும் இத்துறையில் முன்னோக்கிச் செல்ல நினைப்பதில் வியப்பு ஏதுமில்லை.

இந்திய அரசு வேளாண், விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டுக்கு ஆக அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதை அடுத்து, மாநில அரசுகளும் அந்த வழியைப் பின்பற்றுகின்றன.

மகளிர்க்கான ஆளில்லா வானூர்தி பயிற்சித் திட்டம்

மகளிர்க்கான ‘நமோ ஆளில்லா வானூர்தி’ பயிற்சித் திட்டத்தை, கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது இந்திய அரசு.

இதன் மூலம் 446 ஆளில்லா வானூர்திகள் தயாரிக்கப்படும் என்றும் 500 பேருக்கு அவற்றை இயக்குவதற்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கருடா நிறுவனத்தின் அதிகாரி ஷ்யாம் குமார் தெரிவித்துள்ளார்.

“ஒரு வலுவான, வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்ப பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மிக முக்கியமானது. பெண்கள் பொருளியல் ரீதியில் முன்னேறும்போது வீட்டுக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிக்கின்றனர். இந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் ஷ்யாம் குமார்.

இத்திட்டத்தின்கீழ் வேளாண் துறையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் 15,000 ஆளில்லா வானூர்திகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

மேலும், நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,000 ஆளில்லா வானூர்திகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான இலவச ஆளில்லா வானூர்தி பயிற்சித்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கருடா ஏரோ ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.

விவசாய நிலங்களில் உரம் தெளித்தல், வேதிப்பொருள்களைப் பயன்படுத்துதல், நீர்ப்பாசன வேளாண்மை ஆகியவற்றில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

எனவேதான், வேளாண் துறையில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆளில்லா வானூர்தி விமானியாவதற்கான பயிற்சி, உரிமம் வழங்கப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

தமிழகத்தில் கால்பதிக்கும் கூகல்

இந்நிலையில், அனைத்துலக அளவிலான பெரிய நிறுவனங்களின் பார்வை தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. ஆளில்லா வானூர்தி, ‘பிக்ஸல்’ திறன்பேசிகளைத் தமிழகத்தில் தயாரிக்க அந்நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக பிபிசி நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கூகல், ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் தமிழகத்தில் ‘பிக்ஸல்’ திறன்பேசியைத் தொடங்க உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, தமிழகத்தில் ஆளில்லா வானூர்திகளைத் தயாரிக்கும் ஆலையைச் சொந்தமாக நிறுவுவதுதான் கூகல் நிறுவனத்தின் திட்டமாக உள்ளது.

சீனாவுக்கும் மேற்கு உலகிற்கும் இடையே நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், தங்களது விநியோகச் சங்கிலியைச் சீனாவுக்கு வெளியே விரிவுபடுத்த எண்ணும் அனைத்துலக நிறுவனங்களின் முக்கிய, முதன்மைத் தேர்வாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிபிசி நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், ‘பிக்ஸல்’ திறன்பேசிகளுக்கான முதன்மைச் சந்தையாக இந்தியா உருவாகி வருகிறது என்றும் தங்களது அதிநவீன திறன்பேசிகளை இந்திய மக்களுக்கு வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும் கூகல் கடந்த ஆண்டே அறிவித்திருந்தது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இரண்டு தொழிற்சாலைகள் ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் சென்னைக்கு அருகே உள்ள தொழிற்சாலையில் ‘ஆப்பிள் ஐஃபோன்’கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

‘டிரோன்’ தலைநகராக உருவெடுக்க விரும்பும் ஆந்திரா

இந்நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவும் ஆளில்லா வானூர்தி துறையில் பெரும் பாய்ச்சல் காட்டி வருகிறது.

ஆளில்லா வானூர்தி விமானிகளை உருவாக்கும் திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 35,000 இளையர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியாவில் ‘டிரோன்’ தலைநகரமாக ஆந்திரா உருவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து, தமிழக அரசும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. முதற்கட்டமாக, விவசாயத் துறையில் நவீனத்தைப் புகுத்தும்விதமாக மானிய விலையில் ஆளில்லா வானூர்திகளை வழங்க தமிழக வேளாண் துறை முடிவு செய்திருக்கிறது.

வேளாண் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும் விளைச்சலைப் பெருக்கவும் இத்திட்டம் கைகொடுக்கும் என தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழக ஊரகப் பகுதிகளில் ‘டிரோன்’களின் பயன்பாடு

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் ஆளில்லா வானூர்திகள் பயன்பாடு விவசாயிகளுக்கு புதிய, பயனுள்ள அனுபவங்களைத் தந்து வருவதாக பிஐபி (PIB) தெரிவித்துள்ளது.

வேளாண் பணிகளில் வழக்கமான முறையில் உரங்களைத் தெளிப்பதற்கு ஒரு மணி நேரம் ஆகும் நிலையில், தற்போது ஆளில்லா வானூர்திகள் மூலம், அதிகபட்சமாக ஏழு நிமிடங்களில் அது நடைபெறுவதாக சென்னை உரத்தொழிற்சாலை நிறுவனத்தின் கூடுதல் மேலாளர் திரு.கே.சுரேஷ்குமார் கூறுகிறார்.

மேலும், ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தும்போது ஓர் ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே தேவைப்படும். இது வழக்கமான முறையில் தேவைப்படும் 100 லிட்டருக்கு முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் விளக்குகிறார்.

பயிர்களில் நேரடியாக மருந்து தெளிப்பதால் பயிரின் மகசூல் அதிகரிப்பதுடன், மண் வளம் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பமானது, நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், ஆபத்தான வேதிப் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதைக் குறைக்கிறது என்றும் சுரேஷ்குமார் சொல்வதை ஏற்கத்தான் வேண்டியுள்ளது.

ஆளில்லா வானூர்தி ஒன்றுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை இந்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு கடன் பெறுவது எளிதான நடைமுறையாக மாறியுள்ளது.

தமிழக ஊரகப் பகுதிகளில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாடு குறித்து பல்வேறு வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மைக்காலமாக தமிழகத்தின் எந்தக் கிராமத்திலும் ஆளில்லா வானூர்திகளின் ஓசை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. திருமணம், திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு மட்டுமல்லாமல், வேளாண் பணிகளிலும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுவது இதற்குக் காரணம் என்கிறது பிஐபி செய்தி.

இந்தியாவில், ஆளில்லா வானூர்திகளின் தலைநகரம் எது என்பதில் மாநிலங்களுக்கு இடையே நிலவும் நல்ல போட்டி வரவேற்கத்தக்கது என்கிறார்கள் துறைசார்ந்த நிபுணர்கள்.

குறிப்புச் சொற்கள்