சென்னை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை ஜனவரி 31ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
செவ்வாய்க்கிழமை கீழடியில் நடந்து வரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன் இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரூ.22 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே முதன்முதலாக திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட திரு பெரியகருப்பன், இந்த அருங்காட்சியகத்தின் மூலம் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை நேரடியாக அறிந்துகொள்ள முடியும் என்றார்.
தமிழர்களின் பண்டைய நாகரிகம், கலாசாரம், நகர் வாழ்வியல் சிறப்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் வகையில் கீழடி அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுவரை கீழடி அகழாய்வின்போது கண்டறியப்பட்ட உறை கிணறு, சுடுமண் கட்டுமானங்கள், சுடுமண் குழாய்கள் ஆகியவை குழிகளில் காணப்பட்டுள்ளது போலவே இந்த அருங்காட்சியகத்தில் நவீன வசதிகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஜனவரி 31ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அருங்காட்சியகத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

