பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்

பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்

2 mins read
483ce6c0-f459-4538-862f-082757768a78
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: இஎன்எஸ்

சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) அரசு, மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பிற்கான முயற்சி மேற்கொள்வதற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைச் செயல்படுத்த பாஜக அரசு கடந்த ஆண்டே முயற்சித்தது. எனினும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பு மூலம் நாடாளுமன்றத்தின் அடிப்படை அமைப்பையே பிரதமர் மோடி அரசு சீர்குலைக்க நினைப்பதாக மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஏப்ரல் 16ஆம் தேதி கூட்டி, பெண்களுக்கு இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவைத் தொடர்பான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக முதல்வர் வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவில், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான முன்மொழிவு, மத்திய அரசின் முன்மொழிவுகளான ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற முழக்கத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

மேலும், “அந்த முடிவினால் செலவு அதிகரிப்பதோடு மட்டுமன்றி, மக்களின் வரிப்பணம் வீணாகும். நாடாளுமன்றச் செயல்பாடுகளின் தரம் குறையும். மாநிலங்களின் குரலைப் புறக்கணித்துவிட்டு, முறையான கலந்தாலோசனையும் செய்யாமல் தவிர்த்துவிட்டுச் செயல்படுவது மக்களாட்சிக்கு எதிரானது. இது இந்தியாவின் பன்முக, கூட்டாட்சித் தன்மையைச் சிறுமைப்படுத்தும் செயல்,” எனத் தமது பதிவில் அவர் தெரிவித்தார்.

“தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையானது பாஜக ஆதிக்கம் செலுத்தும் வட மாநிலங்களுக்கு வலுவூட்டி, தென்மாநிலங்களின் குரலை நெரிக்கும். மூத்த தலைவர் சித்தராமையா சீற்றத்தோடு கூறியதுபோல, இது நடுநிலையான நடவடிக்கை இல்லை. இது அரசியல் நோக்கம் கொண்ட திட்டமிட்ட கட்டமைப்பு மாற்றம்.

“வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இருமடங்காகும் அதேவேளையில் தென்மாநிலங்களின் அளவு 24 விழுக்காட்டிலேயே தேங்கி நிற்கிறது. இது மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் தெலுங்கானா போன்ற மாநிலங்களைத் தண்டிப்பதாகும்,” எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதில் கூறினார்.

குறிப்புச் சொற்கள்