தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
இன்னும் ஒரு வாரமே உள்ளதால் சூடுபிடித்துள்ள தேர்தல் களம்

ஸ்டாலின், ராகுல் காந்தி ஒரே மேடையில் பிரசாரம்

2 mins read
0127edb6-c05f-47b8-809a-c51dbc7cd2a7
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் (இடது) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வெள்ளிக்கிழமை கோவையில் ஒரே மேடையில் தோன்றி, இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளனர். - கோப்புப்படம்: ஏஎன்ஐ

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.

அவ்வகையில் இம்முறை எப்படியும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வாக்குகளை அள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழ்நாட்டிற்குப் பலமுறை வந்துசென்றுவிட்டார். ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா போன்ற பாஜக தலைவர்களும் தமிழ்நாட்டில் பாஜக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணியும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கோவையில் வெள்ளிக்கிழமை ஒரே மேடையில் தோன்றி, தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு நடக்கவுள்ள அந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், 12 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நூறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக சார்பில் கோவையில் கணபதி ராஜ்குமாரும் பொள்ளாச்சியில் ஈஸ்வரசாமியும் போட்டியிடுகின்றனர்.

கோவையில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை களமிறங்கி இருக்கிறார். அதனையடுத்து, பிரதமர் மோடி மும்முறை அங்கு சென்று வாக்கு திரட்டினார். அப்போதெல்லாம் திமுகவை அவர் கடுமையாகச் சாடியிருந்தார்.

இந்நிலையில், ராகுலும் முதல்வர் ஸ்டாலினும் ஒரே மேடையில் தோன்றவிருப்பதால் அவர்கள் பிரதமர் மோடிக்கு என்ன பதிலடி தரப்போகின்றனர் என்பதைக் கேட்க இண்டியா கூட்டணியினர் ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இரு தலைவர்களின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆளில்லா வானூர்தி பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்