ரூ.1,675 கோடியில் கடலோர மறுசீரமைப்புப் பணிகள்

ரூ.1,675 கோடியில் கடலோர மறுசீரமைப்புப் பணிகள்

1 mins read
92557bd2-0051-40b8-97ad-0667d18f8980
படம்: - தமிழ் முரசு

சென்னை: உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1,675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், கடல்வளத்தைப் பாதுகாக்கவும் ரூ.2,000 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்படும் என்று அரசாணை மூலம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தின்மூலம் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்து, அவற்றைப் பெருகச் செய்து, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகள் இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழகச் சட்டமன்றத்தில் 2023-24ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை தாக்கலின்போது, கடலோர மறுசீரமைப்புப் பணிகளை உலக வங்கி உதவியுடன் தமிழக அரசு செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் மக்கள்தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் அழுத்தம் காரணமாகக் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கடலோர மக்களின் வாழ்வாதாரம் ஆகியவை எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடல் அரிப்பைத் தடுப்பது, கடல் மாசுபாட்டைக் குறைப்பது, கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுக்காக, உலக வங்கி நிதியுதவியுடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,675 கோடி செலவில் பணிகள் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்