சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘ஜாக்டோ - ஜியோ’ அமைப்பினர் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பழைய ஒய்வூதியத் திட்ட வாக்குறுதியைத் திமுக அரசு இன்னும் நிறைவேற்றாத நிலையில், அதனை வலியுறுத்தியும் வேறு பல கோரிக்கைகளை முன்வைத்தும் பிப்ரவரி 14ஆம் தேதி வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் பிப்ரவரி 25ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டமும் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அவ்வமைப்பின் கோரிக்கைகள் குறித்து ஆராய மூவர் குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது. அக்குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, பிரத்திக் தாயன், சென்னை பொருளியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் கே.ஆர். சண்முகம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2003 ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில், 2024 ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும், மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. எனினும், மாநில அரசுப்பணியாளர்கள் 2003 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பிருந்த ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
“எனவே, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது விரிவான அறிக்கையையும் பரிந்துரைகளையும் ஒன்பது மாதங்களுக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.