கடன் சுழலில் தமிழகம்: கணக்குத் தணிக்கைத்துறை எச்சரிக்கை

கடன் சுழலில் தமிழகம்: கணக்குத் தணிக்கைத்துறை எச்சரிக்கை

2 mins read
3d5dc4e7-c1d2-4d1b-b15d-ed3197bde059
திரு திருப்பதி வெங்கடசாமி. - படம்: தினமலர்

சென்னை: தமிழக அரசின் அதிகரித்து வரும் கடன் சேவைச் செலவுகள் பெரும் கவலைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை எச்சரித்துள்ளது.

2024-2025ஆம் நிதியாண்டிற்கான மாநில நிதிநிலை குறித்த தணிக்கை அறிக்கை அண்மையில் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதன்மைக் கணக்காயர் திருப்பதி வெங்கடசாமி, மாநிலத்தின் நிதி மேலாண்மையில் உள்ள சவால்களை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை 2023–24இல் 45,121 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2024-25இல் 45,840 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டபோதிலும் 15வது நிதி ஆணையத்தின் கணிப்பின்படி உபரி வருவாயை அடைய தமிழக அரசு தவறிவிட்டது என்றும் அதேபோல், நிதிப்பற்றாக்குறை 1.01 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது என்றும் திரு திருப்பதி வெங்கடசாமி தெரிவித்துள்ளார்.

இது மாநில நிதி பொறுப்புடைமைச் சட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட மூன்று விழுக்காடு உச்சவரம்பைவிட அதிகம் என்றும் அவர் சுட்டியுள்ளார்.

மானியங்களால் சுமை

அரசின் வருவாய் செலவினத்தில் மானியங்கள் மட்டுமே 16 விழுக்காட்டுப் பங்கை வகிக்கின்றன. மகளிருக்கான உரிமைத் தொகை திட்டம், விவசாயத்திற்கான இலவச மின்சார மானியம் ஆகியவற்றின் காரணமாக மானியச் செலவினம் முந்தைய ஆண்டைவிட 39.35 விழுக்காடு அதிகரித்து 14,854 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வட்டிச்சுழல் ஆபத்து

மாநில அரசு வாங்கிய கடன்களுக்கு 7.78 விழுக்காடு வட்டி செலுத்திவரும் வேளையில், அதன் முதலீடுகளில் இருந்து கிடைத்த வருவாய் 0.83 விழுக்காடு மட்டுமே. வருவாய் வரவில் வட்டி செலுத்துவதற்கான பங்கு 21.18 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

புதிய கடன்களை உற்பத்தித்திறன் கொண்ட கட்டமைப்பு, வளர்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பழைய கடன்களையும் வட்டியையும் அடைப்பதற்கே பெரும்பகுதி கடன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய கடன் சுழற்சி, மாநிலத்தின் புதிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் திறனைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் என தணிக்கைத் துறை எச்சரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
கடன்தமிழகம்கணக்காய்வுநிதிதணிக்கைஅறிக்கைஉற்பத்திவளர்ச்சி