சென்னை: அரிய ரத்த வகை உள்ள நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இத்தகைய கடினமான அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பது உலக அளவில் இதுவே முதல்முறை என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.
மாலத்தீவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ‘பி-பாசிடிவ்’ ரத்த வகையைச் சேர்ந்தவர். மேலும், அவருக்கு மண்ணீரல் விரிவாக்கம், நீரிழிவு, தைராய்டு, கொழுப்பு, இதய நோய்களும் இருந்தன.
அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில், நாள்பட்ட கல்லீரல் நோய் காரணமாக உணவுக்குழாயில் உள்ள நரம்புகள் பெரிதாகி மேல் இரைப்பைக் குடல் ரத்தப்போக்குக்கு வழிவகுத்தது.
இதனால் ரத்த வாந்தி எடுத்த அவர், அடிக்கடி மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது மகனே கல்லீரல் தானம் வழங்க முன்வந்தார். அவர் ‘ஓ பாசிடிவ்’ ரத்த வகையைச் சேர்ந்தவர்.
எனினும், பரிசோதனையில் நோயாளி மிக அரிதான ரத்த வகையைச் சார்ந்தவர் என்பது தெரிய வந்தது. அதாவது, ‘ஆன்டி கிட் ஜேகே (பி) எனும் ‘ஆன்டிபாடி பாசிடிவ்’ ரத்த வகையைச் சேர்ந்தவர் எனக் கண்டறியப்பட்டது.
இது ஆசிய மக்களிடையே அரிதான ரத்த வகை ஆகும். இந்த ரத்த அணுக்கள், சிறுநீரகங்களில் சவ்வில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே, மகனின் ரத்த அணு, தந்தைக்குப் பொருந்தவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதை மீறி சிகிச்சையைத் தொடர்ந்தால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
மருத்துவக்குழுவினர் இந்தச் சவாலை துணிச்சலுடன் எதிர்கொண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்து நோயாளியைக் காப்பாற்றி உள்ளனர்.