மேகதாது அணையை முற்றுகையிடும் தமிழக விவசாயிகள்

மேகதாது அணையை முற்றுகையிடும் தமிழக விவசாயிகள்

படம்: இந்து தமிழ் திசை

30 May 2026 - 7:16 pm

1 mins read

தஞ்சாவூர்: கர்நாடக மாநிலம் மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் செயலைக் கண்டித்து, முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக தஞ்சாவூரிலிருந்து சனிக்கிழமை (மே 30) காலை தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாகப் புறப்பட்டனர்.

கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பு அணையைக் கட்டி தண்ணீரைத் தடுத்து, கர்நாடகா மாநிலத்தின் பாசனத்திற்காகப் பயன்படுத்த உள்ளது.

இதனால் தமிழகத்துக்கு வரக்கூடிய தண்ணீர் வராமல் தடுத்து நிறுத்தப்படுவதால், தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகா அரசு தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி மாதாந்தர நீர் பங்கீட்டை வழங்க வேண்டும். இரு மாநில விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ராசிமணல் என்ற இடத்தில் அணைகட்ட அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மேகதாது பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முற்றுகைப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோயில் முன்பாக உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து தங்களது வாகனப் பேரணியை விவசாயிகள் தொடங்கினர்.

இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
மேகதாதுபோராட்டம்