அதிபர் தேநீர் விருந்தில் தமிழக பெண் ஆட்டோ ஓட்டுநர்

1 mins read
a69cd367-f8fa-4cee-9bb8-85f14f7b324c
ஆட்டோ ஓட்டுநரான சங்கீதா. - படம்: விகடன்

கோவை: கோவையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் டெல்லியில் நடைபெற உள்ள இந்திய அதிபரின் தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சங்கீதாவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவரது கணவர் பாலாஜி கட்டுமானத் தொழிலாளி. இருவரும் இணைந்து மாதம் ஏறக்குறைய ரூ.15,000 சம்பாதிக்கின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக சங்கீதாவின் குடும்பம் வாடகை வீட்டில் வசித்து வந்தது.

ரூ.4,000 வாடகைக்கு குடியிருந்த நிலையில் சொந்த வீடு கட்ட வேண்டும் என பாலாஜி சங்கீதா தம்பதியருக்கு ஆசை ஏற்பட்டது.

இந்த கனவுக்காக இருவரும் சிறுக சிறுக சேமிக்கத் தொடங்கினர்‌. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் உதவியால் ரூ.2.10 லட்சம் மானியம் கிடைத்ததுடன் கூட்டுறவு வங்கியில் இருந்தும் ரூ.5 லட்சம் கடனாகக் கிடைத்துள்ளது.

இதன் மூலம் தங்களுடைய கனவு நனவானதாக கூறியுள்ளார் சங்கீதா.

கடின உழைப்பால் சொந்த வீடுகட்டி அதில் குடும்பத்துடன் வசித்து வரும் அவரைக் கௌரவிக்கும் வகையில் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிபர் முர்மு அளிக்கும் தேநீர் விருந்திலும் சங்கீதா கலந்து கொள்கிறார்.

“என் மகன்களின் கல்விதான் மிகவும் முக்கியம். அவர்களின் எதிர்காலத்துக்கு இந்த சொந்த வீடு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி என்று சங்கீதா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்