ராணிப்பேட்டை: தெற்காசியாவிலேயே முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற இலக்கு நிர்ணயித்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்துக்கும் தமிழ்நாடே முதல் முகவரியாக உள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
“மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகிறது.
“எதிர்வரும் 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றவேண்டும் என தொழில்துறைக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்.
“தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து பணியாற்றும்,” என ஸ்டாலின் கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை (செப்டம்பர் 28) அடிக்கல் நாட்டினார்.
அதோடு ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கரில் அமையவுள்ள காலணி ஆலைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி. ராஜா, ஆர்.காந்தி, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், “டாடா குழுமம் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.
“டாடா குழுமம் தமிழ்நாட்டில் மேலும் கூடுதலாக முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்ற வகையில் ராணிப்பேட்டையில் தொழிற்சாலை அமைகிறது.
“உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் டாடா குழும நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
“தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் டாடா குழுமத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
“பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது,” என முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் வேளாண் குடும்பத்தில் பிறந்து முன்னணி நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவராக விளங்கும் சந்திரசேகரன், இந்திய இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாக பேசிய டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், இந்த ஆலையில் உயர் ரக மின்சார கார்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும் இந்த ஆலை மூலம் 5,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

