தமிழக மீனவர் விவகாரம்: இலங்கை கடற்படைக்கு அன்புமணி கண்டனம்

தமிழக மீனவர் விவகாரம்: இலங்கை கடற்படைக்கு அன்புமணி கண்டனம்

1 mins read
c6a03910-06c3-4dee-ba2c-380e7caabdc1
இலங்கை கடற்படை அத்துமீறி நடந்துகொள்வதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறலை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், நாகை மாவட்டத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

“மீனவர்கள் நலனுக்கான இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் அக்டோபர் 29ஆம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வது எத்தகைய அணுகுமுறை என்பது தெரியவில்லை. மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு கண்டுவிடக்கூடாது என இலங்கை நினைக்கிறதோ என்ற ஐயத்தை இந்த நிகழ்வு காட்டுகிறது,” என்றார் அவர்.

“மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் தலையாயத் தேவை ஆகும். இதை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்ட மீனவர்களை, அவர்களின் படகுடன் உடனடியாக விடுதலை செய்வதற்கும், இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்