சென்னை: சிறைச்சாலையில் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டில் சிறைக்கைதிகளின் உழைப்பில் உருவான பொருள்களை விற்றதன் மூலம் தமிழ்நாடு ரூ.67.08 கோடி (S$9.89 மில்லியன்) மொத்த வருவாய் ஈட்டியதாக அதிகாரத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா (ரூ.55.71 கோடி), கேரளா (ரூ.24.44 கோடி) மாநிலங்கள் முறையே அடுத்த இரு நிலைகளில் உள்ளன.
தேசிய குற்றப் பதிவகத் தரவுகளின்படி, சிறைக்கைதி ஒருவர் தயாரிக்கும் பொருள்களின் மதிப்பைப் பொறுத்தமட்டில் தெலுங்கானா (ரூ.95,187) முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு (ரூ.33,984) இரண்டாமிடத்திலும் சண்டிகர் (ரூ.32,325) மூன்றாமிடத்திலும் உள்ளன.
சிறைக்கைதிகளின் திறன் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்ச்சிநிலை (Skilled) ஊழியர் ஒருவர்க்கு நாளொன்றுக்கு 300 ரூபாயும் பகுதித் தேர்ச்சிநிலை (Semi-skilled) ஊழியர் ஒருவர்க்கு 270 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுவதாக ‘தி இந்து’ செய்தி தெரிவிக்கிறது.
மாநில அரசின் சீர்திருத்த, மறுவாழ்வுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, துணி, தோல், அலுமினியம், மெழுகு, தாள் தயாரிப்புகளுக்கான கட்டமைப்பைச் சிறைத்துறை கொண்டிருக்கிறது.
எட்டு மத்திய சிறைச்சாலைகள், பெண்களுக்கான ஒரு சிறைச்சாலை, இளையர் தடுப்பு நிலையம் ஆகியவற்றில் அந்த வசதி உள்ளது.
கைதிகளின் தயாரிப்புகளைப் பெரும்பாலும் அரசுத் துறைகளே வாங்குகின்றன. அத்துடன், பொதுமக்களும் அவற்றை வாங்கும் வகையில் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் ‘சிறைச் சந்தை’களும் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
விற்பனைமூலம் கிடைக்கும் லாபத்தில் 20 விழுக்காடு, பொருளைத் தயாரித்த கைதியின் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
மீண்டும் குற்றம்புரிவதைத் தடுப்பதற்கும் சிறுகுற்றங்களைப் புரிந்த, முதன்முறைக் குற்றவாளிகள் (18-24 வயதுடையோர்) பொறுப்புள்ள குடிமக்களாக மீண்டும் சமூகத்தில் இணைவதற்கும் உதவும் வகையில் ‘பட்டம்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 9,370 இளங்குற்றவாளிகளில் 18 பேர் மட்டுமே மீண்டும் குற்றம்புரிந்து கைதாகினர்.
அத்துடன், கைதிகள் கல்வி பயிலும் வகையில் அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம், பட்டயம் பெறவும் கைதிகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு 8,844 கைதிகள் சிறையிலிருந்தபடியே பல்வேறு பாடப்பிரிவுகளில் இணைந்து பயின்றனர். சிறைச்சாலைகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்த ரூ.2.08 கோடி செலவிடப்பட்டது.