சென்னை: ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.945 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை இணை இயக்குநர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர், தலைமைச் செயலகத்தில் ஸ்டாலினுடன் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத பாதிப்பு குறித்த அறிக்கையை, குழுவிடம் ஸ்டாலின் வழங்கினார். தற்காலிக, நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி வழங்குமாறு கோரிக்கை மனுவையும் அவர் அளித்தார்.
வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி கரையைக் கடந்தபோது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள், விவசாய நிலங்கள் சேதம் அடைந்தன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க, 2,000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
இதை தொடர்ந்து, ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசிய மோடி, வெள்ள பாதிப்பு விபரங்களை கேட்டறிந்ததுடன், தமிழகத்துக்குத் தேவையான உதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதையடுத்து புயல் நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.944.80 கோடி வழங்கப்படுவதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) அறிவித்தது.
இந்நிலையில், தமிழக புயல், வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு தமிழகம் வந்துள்ளது. குழுவின் அறிக்கைக்குப் பிறகு தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய குழுவினர் விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) ஆய்வுகளை மேற்கொண்டனர். புதுச்சேரி மாநிலத்திலும் சில பகுதிகளில் ஆய்வு செய்யவுள்ளனர்.