சென்னை: புகழ்பெற்ற கர்நாடக எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான தேவனூர் மகாதேவாவுக்கு 2024ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருது அளிக்கப்படுகிறது.
பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வைக்கம் விருது அளித்துச் சிறப்பித்து வருகிறது.
மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த தேவனூர் மகாதேவா மக்களின் மொழியியல் உரிமைகள் மீதான நிலைப்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். சாதி அடிப்படையிலான பாகுபாடு, அடக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்படுபவர்.
இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, சாகித்ய அகாடெமி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
தேவனூர் மகாதேவாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் கேரளா மாநிலம் வைக்கத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில் வழங்குவார்.