சென்னை: தமிழகத்தில் உள்ள 12 முக்கியமான கோவில்களில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மத்தியில் நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை இந்தத் தடையை அறிவித்தது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஆகிய 12 கோவில்களில் இனி நெகிழிப் பொருள்களை அறவே பயன்படுத்த இயலாது.
இக்கோவில்கள், சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் அவற்றுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை சுற்றறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.