வெளிமாநில ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க தமிழக அரசு பரிசீலனை

2 mins read
d0909879-8ccf-49b8-bf86-d055834b8edb
வெளிமாநில ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் பல லட்சக்கணக்கான வெளிமாநில ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக மாநில ஊழியர்கள் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை சட்டப்பேரவையில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான தி.வேல்முருகன், வெளிமாநில ஊழியர்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார். எனவே, வெளிமாநில ஊழியர்கள் அனைவரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“இந்த ஊழியர்கள் என்ன பணிக்காக வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், எந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள், எப்போது மாநிலத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற விவரங்கள் முறையாக இல்லை. எனவே அவர்களைக் கண்காணிக்க வேண்டும்.

“வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, வெளிமாநிலத்தவர் வருகையைக் கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்,” என்றார் வேல்முருகன்.

வெளிமாநில ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தினார்.

இறுதியாகப் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், மாவட்டந்தோறும் ஆட்சியர் அலுவலகங்களில் வெளிமாநில ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்வதற்கான இணையத்தளங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“அவற்றின்வழி அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

“தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் அலுவலகம், உதவி ஆணையர் அலுவலகங்களிலும் வெளிமாநில ஊழியர்களின் வருகை பதிவு செய்யப்படுகிறது. நகைக்கடை, மளிகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோரும் தங்கள் கடைகளில் பணியில் சேர்த்துக்கொள்ளப்படும் வெளி மாநில ஊழியர்களின் விவரங்களைப் பதிவு செய்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

“வெளிமாநில ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து அரசு சார்பில் பரிசீலிக்கப்படும்,” என்று அமைச்சர் சி.வி.கணேசன் மேலும் கூறினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் வெளிமாநில ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின.

குறிப்புச் சொற்கள்