சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் தமிழக அரசு

2 mins read
a1fc8f83-5e8a-42c1-b56e-d94918707590
தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் இதற்கான ஆலோசனையை மேற்கொண்டனர். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் அதிகாரிகள் இதற்கான ஆலோசனையை மேற்கொண்டனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.

அவ்வாறு வெளியேறாதவர்களுக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாமல் நேப்பாளம், இலங்கை, பங்ளாதேஷ் உட்பட, சட்டவிரோதமாக தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளியேற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளி நாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளன.

அதன்படி, விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்துள்ளனர்.

அவர்களை எப்போது, எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், பயங்கரவாத தடுப்புப் பிரிவு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்நிய நாட்டவர்கள் உரிய பயண, அடையாள ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, பல்வேறு மாநிலங்களில் காவல்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஏராளமான பங்ளாதேஷ் குடிமக்கள் போலி ஆதார், வாக்காளர் அட்டைகளைப் பெற்று நீண்ட ஆண்டு காலமாக இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்திலும் ஏராளமான வெளிநாட்டவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்