இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து

ஒப்பந்தத் தாதியரின் உழைப்பை சுரண்டும் தமிழக அரசு

2 mins read
efa8b433-f8cd-4ef9-a0ce-523c7aaa780c
இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக அரசுக்கு, தாதியர்க்கு ஊதியம் கொடுக்க மட்டும் பணம் இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: தமிழக அரசு தாதியரின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இலவசத் திட்டங்களைச் செயல்படுத்தும் தமிழக அரசுக்கு, தாதியர்க்கு ஊதியம் கொடுக்க மட்டும் பணம் இல்லையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் தாதியர் பணியமர்த்தப்படுகின்றனர்.

நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட, தங்களுக்கு குறைவாக வழங்கப்படுவதாக ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ள தாதியர் வருத்தத்தில் உள்ளனர்.

எனவே, அவர்கள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், சம வேலைக்குச் சம ஊதியம் என்ற அடிப்படையில், ஒப்பந்த முறையில் பணியாற்றும் தாதியர்க்கும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், இந்த உத்தரவைத் தமிழக அரசு செயல்படுத்தவில்லை எனக் கூறி, தாதியர் தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

வழக்கு விசாரணையின்போது செவிமடுத்த இரு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 2,000 நாள்களுக்கு மேல் ஆனபிறகும் ஏன் அதை இன்னும் செயல்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பியது.

இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.440 கோடியை இன்னும் வழங்கவில்லை என்றும் அது கிடைத்தால்தான் தாதியர்க்கு முழு ஊதியம் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “தாதியரிடம் அளவுக்கு அதிகமாக உழைப்பைச் சுரண்டுகிறீர்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறைகூறிக் கொண்டே இருக்காதீர்கள்.

“உங்களுக்குத் தேவைப்படுகிறது என்றால் நீங்களாகவே தனியாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து அதைச் செயல்படுத்த வேண்டியது தானே. அரசின் கீழ் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உரிய முறையில் ஊதியம் வழங்குவது உங்கள் கடமை. அதை நீங்கள் எந்தச் சூழலிலும் தட்டிக் கழிக்க முடியாது.

“குறிப்பாக, பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தாதியரை நிரந்தரப் பணி நியமனம் செய்யாமல் உள்ளீர்கள். இலவசங்களை கொடுக்க மட்டும் உங்களுக்குப் பணம் இருக்கிறது. ஆனால் தாதியர்க்கு ஊதியம் கொடுக்கப் பணம் இல்லையா?” என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

குறிப்புச் சொற்கள்