மூடப்பட்ட மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி: தமிழக அரசு உத்தரவு

மூடப்பட்ட மதுக்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி: தமிழக அரசு உத்தரவு

1 mins read
9486f986-51b1-416f-8179-6a35a83bce21
புதுக்கோட்டை நகரப் பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. - படம்: தி இந்து

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, பேருந்து நிலையம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் விஜய் ஆணை பிறப்பித்தார்.

அதனால் வேலை இழக்கும் அபாயத்தில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

“மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களின் பணிமூப்பு அடிப்படையில் ஒரு பட்டியல் தயார்செய்யப்பட வேண்டும். விற்பனை கூடுதலாக இருக்கும் அருகிலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், அந்தப் பணியாளர்களைக் கொண்டு பணிமூப்பின் அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

“அவ்வாறு பணிநிரப்பியது போக எஞ்சிய பணியாளர்கள் இருந்தால், அவர்களைக் காலிப் பணியிடங்கள் உள்ள பிற மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியமர்த்த வேண்டும். அதன் பிறகும் ஊழியர்கள் எஞ்சியிருந்தால் அவர்களைச் சேமிப்புக் கிடங்குகளிலும் மாவட்ட அலுவலகங்களிலும் பணியமர்த்த வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வேலை இழக்கும் அபாயத்தில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை அரசு வேறு துறைகளில் பணியமர்த்த வேண்டும் என்று டாஸ்மாக் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தி. தனசேகர் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன், ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்