தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி

1 mins read
2ef8f1ed-6c49-41a9-a606-e022f78a7ba7
சாலையில் நிம்மதியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மாநிலம் முழுவதும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தெருநாய்களால் ஏற்படும் தொல்லை இனி மெல்லக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தெரு நாய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தெருநாய்கள், ஆங்காங்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரைக் கடித்துக் குதறுகின்றன. இதனால் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகின்றன.

இரவு நேரத்தில் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி செல்லும் சிறார்கள், பெண்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் நிம்மதியாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால், மாநிலம் முழுவதும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

நூறு அரசு கால்நடை மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகள் இனப்பெருக்கத் தடை அறுவை சிகிச்சை செய்யும் வசதிகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த, வயதான மற்றும் ஊனமுற்ற நாய்களுக்கு 72 காப்பகங்கள் அமைக்கப்படும் என்றும் இவற்றைப் பராமரிக்கும் பணியைத் தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், நோய்வாய்ப்பட்டு சுற்றித்திரியும் தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

“பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் தெரு நாய்கள் கருணைக்கொலை செய்யப்பட வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்,” என்று கால்நடைத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்