உலகத் தமிழ் மாநாட்டை அனைத்துலக அளவில் நடத்த தமிழக அரசு திட்டம்

உலகத் தமிழ் மாநாட்டை அனைத்துலக அளவில் நடத்த தமிழக அரசு திட்டம்

2 mins read
b0863fe3-815f-4d0d-bd42-1ad357f7e6d1
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன். - படம்: த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை: அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளில் பல கட்டங்களாக உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்குத் தமிழக அரசு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், 15 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டைத் தமிழக அரசு மீண்டும் நடத்தவுள்ளது.

அதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் ஏற்கெனவே பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தமிழக அரசு வட்டாரங்கள் த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளன.

இந்த மாநாட்டை ஒரே இடத்தில் மட்டும் நடத்திக் கட்டுப்படுத்தாமல், உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் தொடர் அமர்வுகளாக நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, முன்மொழியப்பட்டுள்ள இந்த மாநாடு குறித்து தமிழ் அறிஞர்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களையும் சந்தித்து அவர்களின் கருத்துகளைப் பெறுவதற்காகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ஆ.ராஜ்மோகன், ஜூலை 1 முதல் 7ஆம் தேதி வரை அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். உலகளாவிய தமிழ்ச் சமூகத்தினரின் பரவலான பங்களிப்பை உறுதிசெய்வதே இந்த ஆலோசனைகளின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“கல்விசார் விவாதங்கள் மட்டுமன்றி, இந்த மாநாட்டில் செம்மொழித் தமிழ் குறித்த இணையான கருத்தரங்குகளும் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கலாசாரப் பரிமாற்றம், அறிவுப் பகிர்வுக்கான அமர்வுகளும் இடம்பெறும்,” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 2010ல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான அப்போதைய திமுக அரசு, கோயம்புத்தூரில் உலகச் செம்மொழித் தமிழ் மாநாட்டை நடத்தியது.

முதலாவது உலகத் தமிழ் மாநாடு 1966ல் கோலாலம்பூரில் நடைபெற்றது. தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக 1968ல் அப்போதைய முதல்வரும் திமுக நிறுவனருமான சி.என்.அண்ணாதுரையின் தலைமையில் சென்னையில் நடத்தியது. தமிழகம் இதுவரை சென்னை (1968), மதுரை (1981), தஞ்சாவூர் (1995) என மூன்று இடங்களில் இந்த மாநாட்டை நடத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்