சென்னை: குடிநீர் விற்பனை செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கலன்களை 30 முறை மட்டுமே என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் காரணமாகக் குடிநீர்க் கலன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பல நிறுவனங்கள் மாதக்கணக்கில் கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றன.
இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, புதிய விதிமுறைகளைப் பின்பற்றுமாறு குடிநீர்த் தயாரிப்பு மற்றும் குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கென வழிகாட்டிக் கையேடு ஒன்றை அந்தத் துறை வெளியிட்டுள்ளது. குடிநீர்க் கலன் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.
அவ்விதிகளின்படி, சூரிய ஒளி படும்படி குடிநீரைத் தேக்கி வைக்கக் கூடாது. கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லி கிராம் என்ற அளவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
குடிநீரில் உள்ள கனிமப்பொருள்கள் (TDS) குறையும்பட்சத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எலும்பு தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். எனவே குடிநீர் சுத்திகரிப்பில் முறையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
அதன்படி குடிநீர்க் கலன்களை 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பிப் பயன்படுத்த வேண்டும். கலன்களின் நிறம் மாறும் பட்சத்தில் மீண்டும் மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
குடிநீர்க் கலன்களில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை வெளிப்படையாக அச்சிட வேண்டும். தரமின்றி, முறையான அனுமதியின்றி அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறுவோர்மீது சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விரிவாக ஆய்வு நடத்தி குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனைக் கடைகளில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கலன் குடிநீரால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளைப் பற்றி உணவு பாதுகாப்புத் துறை தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.