சென்னை: தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளைக் கடந்தும் பயன்பாட்டில் உள்ள அரசு வாகனங்கள், அரசுப் போக்குவரத்துக் கழக வாகனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசின் விதிகளின்படி, 15 ஆண்டுகளைக் கடந்த அரசு வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கி புதிய வாகனங்களை வாங்க வேண்டும். இதன் காரணமாக, 15 ஆண்டுகளைக் கடந்த பல அரசு வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
தமிழக அரசு ஏற்கெனவே பல்வேறு அரசாணைகள் மூலம் பழைய அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடியாகும் காலத்தை அவ்வப்போது நீட்டித்து வந்தது.
கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, அரசுத் துறைகள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான 12,000 வாகனங்களின் பதிவு புதன்கிழமை (செப்டம்பர் 30) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்த நீட்டிப்புக் காலம் புதன்கிழமை நிறைவடையும் நிலையில், போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு ஆணையர் அரசுக்குப் பரிந்துரை அளித்தார். பதிவு செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பதற்கான அதிகபட்ச காலவரம்பு 2035 செப்டம்பர் 30 எனத் தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
