சென்னை: மத்திய அரசின் மின்சாரப் பேருந்துச் சேவைத் திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 900 பேருந்துகளை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மத்திய அரசு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால், அதற்கான நிதி சரியாக வராது என்றார்.
சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் மத்திய அரசு இரண்டு மின்சாரப் பேருந்துத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
இதற்காக, ரூ.57,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு திட்டத்தின்கீழ், 169 நகரங்களில் 10,000 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும். 40 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. அதற்கும் குறைவாக, மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு வழங்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை மாறுபடும்.
இப்பேருந்துகளை இயக்க, கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, மத்திய அரசே அதை அளிக்கும் என்றும் பேருந்துச் சேவை மூலம் கிடைக்கும் வருவாயை மாநில அரசு முழுமையாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, கோவைக்கு 150 மின்சாரப் பேருந்துகள், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகியவற்றுக்கு தலா 100 பேருந்துகள் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகியவற்றுக்கு தலா 50 பேருந்துகள் என மொத்தம் 900 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்தப் பேருந்துகள் தமிழகத்துக்கு வேண்டாம் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இத்திட்டத்தைச் செயல்படுத்தினால், மத்திய அரசு நிதியை சரியாக வழங்காது. பெயர் மட்டுமே மத்திய அரசின் திட்டம் என்று குறிப்பிடும்படி இருக்கும்.
எனவேதான், தமிழக அரசு சுயமாகவே மின்சாரப் பேருந்து திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது,” என்றார் அமைச்சர் சிவசங்கர்.

